'டிஎன்ஏ' சோதனையில் திருப்பம்... ஜாய் கிரிசில்டா குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என உறுதி!

 
ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ்

நடிகரும், பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தொடர்ந்த வழக்கில், தற்போது மிக முக்கியமான அறிவியல் பூர்வமான ஆதாரம் கிடைத்துள்ளது.

ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதளப் பக்கங்களில், தனது குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என்றும், அவர் தங்களை ஏமாற்றி விட்டதாகவும் பதிவிட்டிருந்தார். மேலும், 'மாதம்பட்டி பாகசாலா' நிறுவனத்தையும் இதில் இணைத்திருந்தார். இதனை எதிர்த்து மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி பி.என். பிரகாஷ் அவர்களை மத்தியஸ்தராக நியமித்தது.

ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ்

இந்த விசாரணையின் போது, குழந்தையின் தந்தை யார் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்த ஜாய் கிரிசில்டா கோரிக்கை விடுத்தார். இதற்கு ரங்கராஜ் தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி உத்தரவின் பேரில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்காகத் தனி வழக்கறிஞர் ஆணையர் ஒருவரும் நியமிக்கப்பட்டார்.

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர் ஆணையர் சில முக்கியத் தகவல்களைத் தெரிவித்தார்: மாதம்பட்டி ரங்கராஜின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் எடுக்கப்பட்டு, அவை சீல் வைக்கப்பட்ட கவரில் மத்தியஸ்தர் பி.என். பிரகாஷ் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டன.

மாதம்பட்டி ரங்கராஜ்

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த டிஎன்ஏ முடிவுகளின்படி, ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இரு தரப்பு வழக்கறிஞர்களும் தெரிவித்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மத்தியஸ்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதால், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூன் 8 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.