கார்த்திகை தீபத் திருநாளில் வீட்டில் இதைச் செய்யாதீங்க.. வழிபாட்டு முறைகளும் தவிர்க்க வேண்டிய விஷயங்களும்!

 
தீபம் கார்த்திகை விளக்கு

இல்லங்களில் இருள் நீங்கி ஒளி பிறக்கவும், செல்வ வளமும் மங்களமும் பெருகவும் கொண்டாடப்படும் திருக்கார்த்திகை தீபத் திருநாளில், தீபம் ஏற்றி வழிபடும்போது சில முக்கிய விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். குறிப்பாக, பண்டிகை நாளன்று வீட்டில் தவிர்க்க வேண்டிய செயல்கள் மற்றும் தீபம் ஏற்றி வழிபடும் சரியான முறைகள் குறித்து ஆன்மிகப் பெரியோர்கள் பல முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

கார்த்திகை தீபத் திருநாளன்று வீட்டில் உள்ள விளக்குகளைத் தேய்த்துச் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்வதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். பூஜை மற்றும் தீப வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படும் விளக்குகளை ஒரு நாளைக்கு முன்பாகவே நன்கு சுத்தம் செய்து தயாராக வைத்திருக்க வேண்டும் என்பது ஐதீகம்.

தீபம் பரணி மகாதீபம் விளக்கு ஒளி

தீபம் ஏற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் அகல் விளக்குகள் மற்றும் உலோக விளக்குகளில் எவ்விதக் கீறலோ அல்லது உடைசலோ இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கீறல் விழுந்த விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது இல்லத்திற்கு நன்மை தரும்.

கார்த்திகை தீபத் திருநாளன்று மாலை 6 மணிக்குள் வீட்டின் வாசலைச் சுத்தம் செய்து அழகிய கோலமிட வேண்டும். பின்னர், அந்தக் கோலத்தின் நடுவே 6 விளக்குகளுக்கு மேல் எடுத்து வைத்து, எல்லா திசைகளிலும் பிரகாசமாக ஒளி வீசும்படி தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும்.

அகல் விளக்கு தீபம்

விளக்குகளை ஏற்றி வைத்த பின்னர், இல்லத்தில் இயன்ற பாரம்பரியப் பலகாரங்களை (பொரி உருண்டை, அப்பம் உள்ளிட்டவை) இறைவனுக்கும் தீபத்திற்கும் நைவேத்யமாகப் படைக்க வேண்டும். தொடர்ந்து தீபாராதனை காட்டி இறைவனை மனதார வழிபட்ட பின்னர், நைவேத்யம் செய்த பலகாரங்களைப் பிரசாதமாக எடுத்துக்கொள்வது விசேஷ பலன்களையும் இல்லத்தில் சுபிட்சத்தையும் தரும்.

வீட்டின் வாசல், மாடக்குழிகள் மற்றும் பூஜையறைகளில் அகல் விளக்குகளை ஏற்றும்போது காற்றில் அணைந்து விடாதவாறும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அருகில் இல்லாதவாறும் பாதுகாப்பாக வைக்க வேண்டும். சிறிய குழந்தைகள் உள்ள வீடுகளில் கூடுதல் கவனத்துடன் தீபங்களை ஏற்றி வழிபடுவது பாதுகாப்பானதும் சிறப்பானதும் ஆகும்.