தேர்தலில் ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்று பாஜக வேட்பாளர் சாதனை - எங்கு தெரியுமா?!
ராஜஸ்தானில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒருவர் வெறும் ஒரு வாக்குகளை மட்டும் பெற்று சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளார்.
ராஜஸ்தானில் உள்ள 309 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தித்வானா-குச்சமன் மாவட்டத்தில் உள்ள பர்பத்சர் நகராட்சியின் 13-வது வார்டில் பாஜக சார்பில் கைலாஷ்சந்த் என்பவர் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஹினா கானம் 376 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுயேச்சை வேட்பாளர் ரஷீத் கான் 195 வாக்குகள் பெற்ற நிலையில், பாஜக வேட்பாளர் கைலாஷ்சந்த் ஒரே ஒரு வாக்கை மட்டுமே பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இது குறித்துப் பேசிய கைலாஷ்சந்த், தனது சொந்த வாக்குரிமை 12-வது வார்டில் இருப்பதாகவும், ஆனால் கட்சி தன்னை 13-வது வார்டில் களமிறக்கியதாகவும் தெரிவித்தார். அந்த வார்டைச் சேர்ந்த யாரோ ஒருவர் தனக்கு வாக்களித்துள்ளதாக அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். பர்பத்சர் நகராட்சியில் மொத்தம் உள்ள 25 வார்டுகளில் காங்கிரஸ் 13 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
