இதுலேயுமா ஸ்டிக்கர் ஒட்டுவீங்க? அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் அகற்றம்; விஜய் படம் ஒட்டப்பட்டதால் பரபரப்பு!

 
அம்மா அம்மா

சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் உள்ள அம்மா உணவக முகப்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் நீக்கப்பட்டு, தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம் ஒட்டப்பட்டிருப்பது தமிழக அரசியல் களத்தில் புதிய சர்ச்சையையும், அதிமுகவினர் மத்தியில் பலத்த கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுலேயுமா ஸ்டிக்கர் ஒட்டுவீங்க... இதுக்கு திமுகவே பரவாயில்லையே என்று பொதுமக்கள் முணுமுணுக்க துவங்கியுள்ளனர். 

ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சோழம்பேடு சாலையில் அரசு சார்பில் 'அம்மா உணவகம்' செயல்பட்டு வருகிறது.  இந்த உணவகத்தின் முகப்புப் பலகையில் 'அம்மா உணவகம்' என்ற பெயரின் அருகில் நீண்ட நாட்களாக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம்  திடீரென நீக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட அந்த இடத்தில், தற்போதைய முதலமைச்சரான விஜய்யின் புகைப்படம் புதிதாக ஒட்டப்பட்டுள்ளது. இந்தத் தகவல் பரவியதைத் தொடர்ந்து அப்பகுதி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டிருக்கும்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஏழை எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கக் கொண்டு வரப்பட்ட உன்னதமான திட்டம்தான் அம்மா உணவகம். இதனால், இந்தத் திட்டத்தின் அடையாளமாக அவரது படமே எப்போதும் முகப்பில் வைக்கப்பட்டு வந்தது:

கடந்த காலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு பொறுப்பேற்ற போது கூட, அரசியல் நாகரிகம் கருதி அம்மா உணவகங்களின் பெயரோ அல்லது அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் புகைப்படங்களோ நீக்கப்படவில்லை. அதே நடைமுறையே தொடர்ந்தது.

ஆனால், புதிய தவெக அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, திட்டத்தின் நிறுவனரான ஜெயலலிதாவின் படம் அகற்றப்பட்டு முதலமைச்சர் விஜய்யின் படம் ஒட்டப்பட்டிருப்பது அநாகரிகமான அரசியல் செயல் என அதிமுகவினர் கடுமையாகக் குற்றம் சாட்டுகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் இந்தச் சம்பவத்திற்குப் பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

அம்மா உணவகத்தின் பெயர் பலகையில் கருணாநிதி படம்

அரசுத் திட்டங்களில் தற்போதைய முதலமைச்சரின் படத்தை வைப்பதில் தவறில்லை என்றாலும், ஜெயலலிதாவின் பெயரில் இயங்கும் திட்டத்தில் இருந்து அவரது படத்தை அகற்றியது ஏற்புடையதல்ல என்று பொதுமக்கள் தரப்பிலும் கருத்துக்கள் எழுந்துள்ளன. எனவே, உடனடியாக அங்கு ஒட்டப்பட்டுள்ள முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தை அகற்றிவிட்டு, மீண்டும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தையே அங்கு நிறுவ வேண்டும் என அதிமுகவினர் மற்றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.