“வீரமணியின் லீலைகளை அம்பலப்படுத்திய என்னையே குற்றவாளியாக்குவதா?” - போலீசாரிடம் கதறியழுத சாந்தி; 3 நாள் காவலில் தீவிர விசாரணை!
ஜெம் கிரானைட் தொழில் அதிபர் வீரமணி மீது தொடரப்பட்ட போக்சோ பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்படி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
'ஜெம்' கிரானைட் தொழில் அதிபர் வீரமணி சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்பட்டு சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று, துணை போலீஸ் கமிஷனர் கீதாஞ்சலி மற்றும் உதவி கமிஷனர் ராஜலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் இவ்விருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். வீரமணியால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் எத்தனை பேர்?, இந்தச் செயல் எப்போது முதல் நடந்து வருகிறது? உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவைக் காட்டி வீரமணியை மிரட்டிப் பணம் பறித்ததன் பின்னணியில் உள்ளவர்கள் யார், இதில் அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது கடும் மன உளைச்சலுக்கு ஆளான சாந்தி, வீரமணியின் தவறுகளை அம்பலப்படுத்திய தன்னையே காவல்துறை குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளதாகக் கூறி போலீசாரிடம் அழுது புலம்பியுள்ளார். சில கேள்விகளுக்கு மவுனம் காட்டிய அவர், சில கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.
தேனாம்பேட்டையில் உள்ள சாந்தியின் வீட்டிற்கு மகேந்திர சிம்கனை அழைத்துச் சென்ற காவல்துறையினர், அங்குப் பாலியல் தொடர்பான முக்கிய ஆவணங்களை நேரில் கைப்பற்றினர். மேலும், வீரமணியின் எதிரிகள் அல்லது அவர்களின் தூண்டுதலின் பேரில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
