“உங்கள் மாமி ஆட்சி தொடர வேண்டுமா CM சார்?” - முன்னாள் சபாநாயகர் அப்பாவு!
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி, முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சரைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளதாக அப்பாவு சாடியுள்ளார். உளவுத்துறை அளிக்கும் எச்சரிக்கைகளை முதலமைச்சர் அலட்சியப்படுத்துவதாகவும், அவருடன் இருப்பவர்கள் காவல்துறையைத் தங்கள் விருப்பப்படி 'ஏவல்துறையாக'ப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

போதைப்பொருள் விற்பனையாளர்களைக் காவல்துறைக்கு அடையாளம் காட்டிய கோவை அமுதன், திருவொற்றியூர் தினேஷ், சென்னை கோயம்பேடு யான்சி மற்றும் ராஜபாளையம் மணிகண்டன் ஆகியோர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இக்கொலைகளைக் 'கோஷ்டி மோதல்' எனத் திசைதிருப்பித் தயாரிக்கப்பட்ட அறிக்கையைச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் நேரில் வாசிக்காமல், பிற அமைச்சர்களை வைத்து வாசிக்க வைத்ததாக அவர் விமர்சித்துள்ளார்.
போதை வியாபாரிகளைத் தண்டிப்பதற்குப் பதிலாக ஊக்கப்படுத்தும் வகையில் அரசின் செயல்பாடு அமைந்திருப்பதாகச் சாடிய அவர், "தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களைப் பேரழிவிற்கு கொண்டு செல்கிறீர்களே! உங்கள் மாமி ஆட்சி தொடர வேண்டுமா CM சார்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
