மருத்துவர் கற்பழிப்பு-கொலை வழக்கு : மரணத்துடன் போராடிய 35 நிமிடங்கள்... சஞ்சய் ராய் கொடுத்த பகீர் வாக்குமூலம்!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் இளம் பெண் பயிற்சி மருத்துவரைக் கொடூரமாக தாக்கி பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய் 48 மணி நேர போலீஸ் விசாரணைக்கு பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்டதும், அன்றைய இரவு நடந்த சம்பவங்கள் குறித்தும் கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து போலீஸ் வட்டாரங்களின் தகவல்களின் படி, தாக்குதல், பலாத்காரம் மற்றும் கொலை நடந்த இரவில் நடந்த சம்பவங்கள் குறித்து சஞ்சய் ராய் போலீசாரிடம் விரிவாக விசாரணையில் கூறியிருக்கிறார்.

கடந்த வியாழனன்று காலை கொல்கத்தா திரும்பிய ராய், அன்றைய இரவு சுமார் 10 மணியளவில் ஆர்ஜி மருத்துவமனைக்குள் நுழைவது மருத்துவமனை சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்கிறது. அன்றைய இரவு 11 மணியளவில், மருத்துவமனையின் நான்காவது மாடியில் நோயாளியை அனுமதிக்கும் பணியை சஞ்சய் ராய் தொடங்கியுள்ளார். இரவு இரவு 11:45 மணியளவில் ராய் நான்காவது மாடியில் இருந்து வெளியேறி, எந்த நோயாளியுடனும் செல்லாமல் தனியே லிஃப்ட்டில் கீழே இறங்கிச் செல்வது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது.அதன் பின்னர் அதிகாலை 1:30மணிக்கும் 3:30 மணிக்கு இடையில், ராய் மருத்துவமனை வளாகத்திற்குப் பின்புறம் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர் வெள்ளிக்கிழமை அதிகாலை 4:03 மணிக்கு, மீண்டும் மருத்துவமனைக்குள் நுழைந்த சஞ்சய் ராய், லிஃப்ட் கதவுகள் மூடப்பட்டிருப்பதைப் பார்த்து விட்டு, நான்காவது மாடிக்கு படிக்கட்டுகளில் ஏறி செல்வது பதிவாகியிருக்கிறது. நான்காவது மாடிக்கு சென்றதும் ஆபரேஷன் தியேட்டரை அணுகி பார்க்கிறார். ஆபரேஷன் தியேட்டர் காலியாக இருப்பதைக் கண்ட சஞ்சய், கருத்தரங்கு அரங்கிற்குள் நுழைகிறார்.
அதன் பின்னர் சஞ்சய் ராய் போலீசாரிடம் கூறியுள்ள வாக்குமூலத்தின்படி, கருத்தரங்கு அரங்கில் இளம் பெண் மருத்துவரைக் கண்டதும் ஆரம்பத்தில் பாலியல் ரீதியாக அவரைத் துன்புறுத்த முயன்றுள்ளார். பயிற்சி மருத்துவர் எதிர்த்து, உதவிக்கு அழைக்க முயன்ற போது, ராய் மருத்துவரைக் கடுமையாகத் தாக்கி, அவள் முகத்தை அழுத்தி, தலையை தரையில் பலம் கொண்ட மட்டும் அடித்துள்ளார். இந்த கொடூரமான தாக்குதலால் நிலைக்குலைந்த பெண் மருத்துவர் தலையில் பலத்த காயங்களுடனும், அவள் மீது சஞ்சய் ராய் செலுத்திய பலமான அழுத்தம் காரணமாக, பெரிமார்ட்டம் நிலை என்று அழைக்கப்படும் மரணத்திற்கு அருகில் உள்ள நிலைக்கு சென்றுள்ளார்.

பெண் மருத்துவர் சுயநினைவை இழந்து மயக்க நிலைக்கு சென்றதைப் பயன்படுத்தி, ராய் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறியுள்ளார். இதற்கிடையே பெண் மருத்துவர் உயிரிழந்தது தெரியாமல் மீண்டும் வெறித்தனமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் அதிகாலை 4:37 மணிக்கு எதுவும் தெரியாததைப் போல மருத்துவமனையை விட்டு வெளியேறி போலீஸ் பாராக் நம்பர் நான்கிற்கு சென்றதாக கூறப்படுகிறது. போலீசார் அவரைக் கைது செய்யும் வரையில் அவர் அங்கே மறைந்திருந்திருக்கிறார். இந்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி மேலும் ஆதாரங்களை சேகரித்து மற்ற சாட்சிகளையும் விசாரித்து வருகின்றனர்.
சஞ்சய் ராய் மீது கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை உட்பட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை ஊழியராக இல்லாத ராய், மருத்துவமனையின் தடைசெய்யப்பட்ட அனைத்து பகுதிகளுக்குள்ளும் நுழைந்து, யாராலும் கண்டுபிடிக்கப்படாமல் கொடூரமான இந்த செயலை எப்படிச் செய்தார் என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
