அரசு மருத்துவமனைக்குள் புகுந்து கத்தி முனையில் டாக்டரிடம் கொள்ளை - உ.பி.யில் அதிர்ச்சி!

 
கொள்ளை  கொலை

உத்தர பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனைக்குள்ளேயே புகுந்த மர்ம நபர்கள், கத்தி முனையில் மருத்துவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போனைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் புதாவுன் மாவட்டத்தில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில், ரத்த வங்கியில் பணியில் இருந்த டாக்டர் விகாஸ் சர்மா என்பவரை அணுகிய இரண்டு நபர்கள், அவரிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.

திடீரெனத் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து டாக்டரை மிரட்டிய அவர்கள், அவரிடமிருந்த ரூ. 25,000 ரொக்கப் பணம் மற்றும் செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பியோடினர். இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த டாக்டர் விகாஸ், உடனடியாக சக பணியாளர்களுக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக நகர வட்ட அதிகாரி ராகுல் பாண்டே தெரிவித்துள்ளார்.