வீட்டு வாசலில் நிறுத்திய காரில் மருத்துவர் சடலமாக மீட்பு!

 
rajasthan

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டம் உதய்ப்பூர்வாதி பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் குமார் (37). மருத்துவத் துறையில் பணியாற்றி வந்த இவர், தனது குடும்பத்துடன் அந்தப் பகுதியில் உள்ள அதர்ஷ் நகரில் வசித்து வந்தார். நேற்று காலை அவர் வழக்கம்போல் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டுத் தனது காரில் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

rajasthan

வீட்டின் வாசலில் வந்து காரை நிறுத்திய சந்தீப் குமார், நீண்ட நேரமாகியும் வாகனத்தை விட்டு கீழே இறங்காமல் காருக்குள்ளேயே இருந்துள்ளார். கார் வெகுநேரமாக ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அருகில் சென்று பார்த்துள்ளனர். அப்போது காருக்குள் மருத்துவர் சந்தீப் குமார் அசைவற்று சடலமாகக் கிடந்ததைக் கண்டு அவர்கள் உறைந்து போயினர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக உள்ளூர் காவல் துறையினருக்கு அவசரத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காரில் இருந்த சந்தீப் குமாரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மாரடைப்பால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா, கொலை அல்லது தற்கொலையா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.