நாளை நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்!
நாளை ஆகஸ்ட் 17ம் தேதி சனிக்கிழமை நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக ஐஎம்ஏ அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் பெண்மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை ஆகஸ்ட் 17ம் தேதி காலை 6:00 மணி முதல் 24 மணி நேர வேலை நிறுத்தம் நடத்தப்படும் என இந்திய மருத்துவ சங்கம் ஐ.எம்.ஏ., அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த பயிற்சி பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். மருத்துவமனையின் கூட்ட அரங்கில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், நாடு முழுவதும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. சி.பி.ஐ., விசாரணை கோல்கட்டா பயிற்சி பெண் டாக்டர் கொலை சம்பவம் தொடர்பாக அந்தக் கல்லுாரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவு படி, இந்த வழக்கு சி.பி.ஐ., க்கு மாற்றப்பட்டுள்ளது.

நேற்று ஆகஸ்ட் 15ம் தேதி கொலை செய்யப்பட்ட பெண் டாக்டர் பணிபுரிந்து வந்த அரசு மருத்துவமனையை ஏராளமானோர் சேர்ந்து அடித்து நொறுக்கினர். இந்நிலையில், ''ஆகஸ்ட் 17ம் தேதி காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி காலை 6 மணி வரை 24 மணி நேரம் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ சேவைகள் நிறுத்தப்படும். விபத்து சிகிச்சைப் பிரிவுகள் தவிர மற்ற எந்த மருத்துவ சேவைகளும் செயல்படாது. மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசு அதிகாரிகளின் பொறுப்பு'' என இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
