அன்பில் மகேஷ் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், மின்னணு சாதனங்களின் விவரங்கள்!

 
அன்பில் மகேஷ் ஆர்.எஸ்.பாரதி

தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குச் சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடிச் சோதனைகளை நடத்தியுள்ளனர்.

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளி தர உயர்வு, DTCP அனுமதி மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்தன. இப்புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பி.டி.அரசகுமார், சுரேஷ், ராஜா ஆகிய மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அன்பில் மகேஷ்

இவ்வழக்கில் பெறப்பட்ட ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குச் சொந்தமான 4 இடங்கள் மற்றும் அவரது உதவியாளர்களான வாலாடி கார்த்திக், அருண் பிரகாஷ், பிரகாஷ் ஆகியோருக்குச் சொந்தமான இடங்கள் உட்பட மொத்தம் 9 இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர்.

அன்பில் மகேஷ்

இந்தச் சோதனையின் போது ஏராளமான சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், காசோலைகள் உள்ளிட்ட வழக்கு சம்பந்தமான 118 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், 18 செல்போன்கள், 3 லேப்டாப்கள், 8 பென்டிரைவ்கள், 2 டெஸ்க்டாப் கணினிகள், ஒரு டேப்லெட் மற்றும் ஒரு ஆப்பிள் ஐபேடு போன்ற மின்னணு சாதனங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.