"ஷாம்பு போட்டு குளிப்பதால் ஆற்றில் நுரை பொங்குகிறதா? அமைச்சரின் பேச்சுக்கு வேல்முருகன் கண்டனம்!

 
நுரை வேல்முருகன்

நொய்யல் மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் பெருக்கெடுக்கும் நுரைக்கு மக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்புதான் காரணம் எனச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ் கூறியதற்குத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் த.வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நொய்யல் மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் நுரை பொங்குவதற்குப் பொதுமக்கள் பயன்படுத்தும் சோப்பும் ஷாம்பும்தான் காரணம் என்றால், எந்த நீர் மாதிரியை ஆய்வு செய்து அமைச்சர் இந்த முடிவுக்கு வந்தார் என வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆம்பூர் பாலாறு ரசாயன நுரை

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் பதிவுகளிலேயே சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைக் கழிவுகளும், சாயப்பட்டறைக் கழிவுகளுமே ஆற்றின் மாசுபாட்டுக்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிற்சாலைக் கழிவுகளை மூடி மறைத்து மக்கள் மீது பழி போடுவது ஏன் என்று சாடியுள்ளார்.

ஆற்றில் கலக்கும் தொழிற்சாலைக் கழிவுகளின் ரசாயனக் கூறுகள் என்னென்ன? கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்த முழுமையான நீரியல் மற்றும் ரசாயன ஆய்வு அறிக்கையை அரசு வெளிப்படையாக வெளியிடத் தயாரா என்றும் கேட்டுள்ளார்.

நுரை பொங்க வரும் தண்ணீர்

ஆறுகள் என்பது மக்களின் குடிநீர் மற்றும் விவசாய வாழ்வாதாரத்துடன் தொடர்புடையவை என்பதால், அறிவியல் பூர்வமான தரவுகள் இன்றி மக்கள் மீது பழியைச் சுமத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ள வேல்முருகன், அமைச்சர் தனது கருத்தைத் திரும்பப் பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.