இப்படியெல்லாமா நடக்கும்? - பைக்கில் கிடார் கொண்டு சென்றவருக்கு ரூ.500 அபராதம் - பெங்களூரில் சுவாரஸ்யம்!

 
பைக்கில் கிடார்

பெங்களூரில் ஏஐ தொழில்நுட்பத்துடன் இயங்கும் தானியங்கு போக்குவரத்து கேமரா செய்த தவறு காரணமாக, இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டிய விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெங்களூரு ஹெப்பாலில் இருந்து டின் பேக்டரி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டி ஒருவர், தனது முதுகில் கிடார் இசைக்கருவி பையை மாட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஏஐ போக்குவரத்து கேமரா, அந்த வாகன ஓட்டியின் முதுகில் இருந்த கிடார் பையைப் பின்னால் அமர்ந்திருப்பவராகத் தவறாகக் கணித்துள்ளது.

ஏஐ

வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்தவர் தலைக்கவசம் அணியவில்லை என்று கூறி அந்த வாகன ஓட்டிக்குக் காவல் துறையினரிடமிருந்து மின்னணு அபராத ரசீதும், அதனுடன் கூடிய புகைப்படமும் வந்துள்ளது. அதைப் பார்த்து வாகனத்தை ஓட்டி சென்றவர் பெரும் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அந்தப் புகைப்படத்தை அருகில் சென்று பெரிதாக்கிப் பார்த்த போது தான், பின்னால் இருப்பது நபர் அல்ல, மாறாக அவரின் முதுகில் இருந்த கிடார் பை என்பது தெரியவந்தது. ஏஐ கேமராவின் இந்தத் தவறான அடையாளம் காணும் தொழில்நுட்பப் பிழை சமூக வலைதளங்களில் பரவி தற்போது இணையவாசிகளிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.