கின்னஸ் record... 56 மனிதர்களின் முதுகில் பாய்ந்து புதிய சாதனை படைத்த நாய்... வைரல் வீடியோ!
கனடா நாட்டின் எட்மண்டன் பகுதியில் வரிசையாக குனிந்து நின்ற 56 மனிதர்களின் முதுகுகளின் மீது, வெறும் 16 விநாடிகளில் மின்னல் வேகத்தில் ஓடி தாவிக்குதித்து ஆஸ்திரேலிய ஷெப்பர்ட் இன நாய் ஒன்று கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது. கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த ஜெனிபர் பிரேசர் என்பவர் வளர்க்கும் 'சார்டோன்' என்ற பெண் நாயே இந்த வியக்கத்தக்க உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.
கடந்த ஜூன் 14 அன்று கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள பேஸ்பால் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இந்த சாதனை நிகழ்ச்சி அதிகாரப்பூர்வமாக நடைபெற்றது. மைதானத்தில் திரண்டிருந்த 56 தன்னார்வலர்கள் புல்வெளியில் வரிசையாகக் குனிந்து நின்ற நிலையில், கின்னஸ் விதிகளின்படி ஒரு நிமிடத்திற்குள் அவர்களைக் கடக்க வேண்டும்.
நடுவர்கள் சிக்னல் கொடுத்த அடுத்த விநாடியே சார்டோன் நாய் சிறுத்தையைப் போல பாய்ந்து மனிதர்களின் முதுகுகளை மட்டுமே மிதித்தது. சற்றும் நிலைகுலையாமல் வெறும் 16 விநாடிகளில் 56 பேரையும் கடந்து எல்லையை அடைந்த இந்த நாயின் சாதனை வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் உலக அளவில் வைரலாகி வருகிறது.
