வளர்ப்பு நாய்க்கு விஷம் கொடுத்து வாலிபர் தற்கொலை...வேலையில்லாத் திண்டாட்டத்தால் விபரீதம்!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் வேலையின்மை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாலிபர் ஒருவர் தனது வளர்ப்பு நாயைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பரேலியைச் சேர்ந்த நிகில் என்ற இளைஞர், தனது பெற்றோரின் மறைவுக்குப் பிறகு வாடகை அறையில் தனியாக வசித்து வந்தார். சொத்து விற்பனை மற்றும் தரகு வேலை செய்து வந்த அவருக்கு, கடந்த சில மாதங்களாக முறையான வருமானம் இல்லாததால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், தான் உயிராக வளர்த்து வந்த நாய் மட்டுமே அவருக்குத் துணையாக இருந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை வழக்கமாகச் சாப்பிட வரும் நிகில் வராததால் சந்தேகமடைந்த அவரது உறவினர் தீரஜ் சந்தன், வீட்டிற்குச் சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, நிகில் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது வளர்ப்பு நாய் தரையில் இறந்தும் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

தகவலறிந்து வந்த போலீசார் கதவை உடைத்து உடல்களை மீட்டனர். அங்கு எடுக்கப்பட்ட தற்கொலை கடிதத்தில், "யாரும் இல்லாத நிலையில் இந்த நாயை அநாதையாக விட்டுச் செல்ல மனமில்லை, அதனால் இதைக் கொன்றுவிட்டு நானும் செல்கிறேன்" என உருக்கமாக எழுதியிருந்தார். வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் தனிமை ஒரு இளைஞனைத் தற்கொலைக்குத் தூண்டியுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
