நாய் கடித்த ஆத்திரம்... வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்... பெரும் பரபரப்பு!
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் நாய் கடித்த ஆத்திரத்தில் வாலிபர் ஒருவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 32 வயதான மாரித்தங்கம் என்ற கூலித்தொழிலாளி நேற்று முன்தினம் இரவு வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாகத் தன்னை நாய் கடித்து விட்டதாக நினைத்து அந்தப் பகுதியில் உள்ள அந்தோணி சகாயசேவியர் என்பவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டின் மீது கற்களை வீசி எறிந்து கடும் தகராறிலும் அராஜகத்திலும் ஈடுபட்டுள்ளார்.
கற்களை வீசித் தகராறு செய்த பின்னரும் ஆத்திரம் தணியாத மாரித்தங்கம் நேற்று அதிகாலை நேரத்தில் மீண்டும் அந்த வீட்டிற்கு வந்துள்ளார். தான் கையில் எடுத்து வந்த பாட்டிலில் பெட்ரோலை நிரப்பித் தீ வைத்து வீட்டின் மீது எறிந்துவிட்டுத் தப்பியோடியுள்ளார். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் அந்தோணி சகாயசேவியரின் வீட்டின் வெளிப்புறச் சுவரில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. சத்தம் கேட்டு ஓடிவந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாகத் தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து அந்தோணி சகாயசேவியர் உடனடியாகச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள கூலித்தொழிலாளி மாரித்தங்கத்தைப் பிடிக்கக் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
