15 பேரை கடித்து குதறிய தெரு நாய்கள்... மக்கள் வெளியில் நடமாட அச்சம்!

 
தெருநாய் நாய் ரேபிஸ் தெருநாய் நாய் ரேபிஸ்

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று அதிகாலையில் பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த ஞான பாக்கியம் (77) என்ற மூதாட்டி, அதிகாலையில் வீட்டின் முன்பு தண்ணீர் தெளிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு பதுங்கியிருந்த தெருநாய் ஒன்று, எதிர்பாராதவிதமாக அவரை பாய்ந்து கடித்து குதறியது. மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தவர்களையும் அந்த நாய் விடாமல் துரத்திச் சென்று கடித்ததால் அந்த இடமே போர்க்களம் போல மாறியது.

இந்த வெறிநாய் தாக்குதலில் அதே தெருவைச் சேர்ந்த முத்துக்கனி (40), மண்டோதரி (63), சமுத்திரம் (80) மற்றும் ஸ்ரீராம் (56), முத்துப்பாண்டி (60) உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து காயமடைந்தனர். நாயிடம் இருந்து தப்பிக்க மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடிய நிலையிலும், தெருவில் சென்ற பலரை அந்த நாய் விடாமல் கடித்தது. காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஈரோடு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் 15 பேரை தெருநாய் கடித்த சம்பவத்தால் சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் தற்போது கடும் பீதியில் உள்ளனர். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சும் சூழல் நிலவி வருகிறது. இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அந்த வெறிநாயை பிடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், வெறிநாய்களை அப்புறப்படுத்தவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.