உலகின் மிக நீளமான வால் கொண்ட கழுதை: ஹோப் கின்னஸ் சாதனை!
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் பைரன் நகரைச் சேர்ந்த ஹோப் என்ற கழுதை, உலகின் மிக நீளமான வால் கொண்ட கழுதை என்ற புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. ஹன்னா ப்ராஸ்ட் என்பவர் வளர்த்து வரும் அரிய வகை அமெரிக்கன் மம்மத் ஜாக்ஸ்டாக் இனக் கழுதையான ஹோப்பின் வால் வழக்கத்திற்கு மாறாக மிகவும் நீளமாக வளர்ந்திருந்தது.
கால்நடை மருத்துவர்கள் மற்றும் கின்னஸ் சாதனைக் குழுவினர் முன்னிலையில் ஹோப்பின் வால் அளவிடப்பட்டதில், அது 50.73 சென்டிமீட்டர் (சுமார் 20 அங்குலம்) நீளம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் உலகின் மிக நீளமான கழுதை வால் என்ற சாதனையை ஹோப் தன்வசப்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே சுமார் 15 அங்குல நீளமுள்ள காதுகளுடன் உலகின் மிக நீளமான காதுகள் கொண்ட கழுதை என்ற கின்னஸ் சாதனையையும் ஹோப் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020-ம் ஆண்டு மிகவும் மெலிந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இந்தக் கழுதை, உரிமையாளரின் அன்பான பராமரிப்பால் குணமடைந்து தொடர்ந்து சாதனை படைத்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
