“ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்காதீங்க” - டிடிவி வலியுறுத்தல்!
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் மேலும் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைப்பதற்கான திட்டத்திற்குத் தமிழக அரசு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரங்கிப்பேட்டை கடற்பகுதிக்கு உட்பட்ட ஆழ்கடல் மண்டலத்தில் கூடுதலாக 4 ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைத்து ஆய்வு செய்வதற்காக, 'இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன்' நிறுவனம் தமிழக அரசிடம் அனுமதி கோரியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டத்திற்காகக் கடலுக்கு அடியில் நடத்தப்படும் அதிநவீன நில அதிர்வுச் சோதனைகள் மற்றும் கிணறுகளில் இருந்து வெளியேறும் அபாயகரமான ரசாயனக் கழிவுகள் காரணமாக, அந்தப் பகுதியில் உள்ள ஒட்டுமொத்த கடல்சார் சுற்றுச்சூழல் மண்டலமும் கடுமையாகப் பாதிக்கப்படும் என அவர் கவலை தெரிவித்துள்ளார். மேலும், கடலில் வாழும் அரிய வகை உயிரினங்கள் அழியும் அபாயமும், கடல்வளம் முற்றிலும் சிதையும் சூழலும் உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பரங்கிப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான கடலோரக் கிராம மக்களின் முதன்மைத் தொழிலாகவும், வாழ்வாதாரமாகவும் மீன்பிடித் தொழிலே விளங்கி வருகிறது. இப்படியான சூழலில், கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காகக் கொண்டு வரப்படும் இத்தகைய திட்டங்கள் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை வேரோடு அழித்துவிடும் எனத் தினகரன் எச்சரித்துள்ளார்.
எனவே, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களையும், பாரம்பரியமிக்க மீனவப் பெருமக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் கடமை இந்த அரசுக்கு உள்ளது என்பதை உணர்ந்து, தனியார் நிறுவனம் சமர்ப்பித்துள்ள இந்த ஹைட்ரோகார்பன் திட்ட விண்ணப்பத்தை ஆரம்ப நிலையிலேயே முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜயை அவர் வலியுறுத்தியுள்ளார்.
