“விசில் சத்தத்திற்கு ஏமாறாதீங்க!” - பிரேமலதா தீவிர பிரச்சாரம்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, தனது வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று மாலை அதிரடி பிரசாரம் மேற்கொண்டார்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் 'விசில்' சின்னத்தையும், அவரது அரசியல் வருகையையும் மறைமுகமாக விமர்சித்த பிரேமலதா பேசுகையில், "தற்போது புதிதாக ஒருவர் விசில் அடித்துக் கொண்டு வந்துள்ளார். அந்த விசில் சத்தத்தைக் கேட்டு மக்கள் யாரும் ஏமாந்துவிடக் கூடாது. மக்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்தின் முதல் பட்டனை அழுத்தி 'முரசு' சின்னத்திற்கு வாக்களியுங்கள்."

திமுக கூட்டணியின் பலம் குறித்து அவர் பேசுகையில், "முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி ஒரு மகத்தான கூட்டணி. இந்தத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று, அண்ணன் ஸ்டாலின் இரண்டாவது முறையாக மீண்டும் முதலமைச்சராவது உறுதி," எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.
தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ மணி, கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிப் பக்கம் தலைகாட்டவில்லை என்றும், மக்களுக்காகச் சட்டமன்ற அலுவலகத்தைக் கூடத் திறக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற்றால் ஓமலூர் தொகுதியைத் தமிழ்நாட்டிலேயே சிறந்த தொகுதியாக மாற்றுவோம் எனக் கூறி பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.

மறைந்த கேப்டன் விஜயகாந்த் பெயரில் இலவசக் கணினி மற்றும் ஏ.ஐ. (AI) பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். புதிய வேளாண் கல்லூரி மற்றும் அதிநவீன நூலகம் உருவாக்கப்படும். தொகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் காவிரி உபரி நீரால் நிரப்பப்படும். பெண்கள் இரவு நேரங்களில் அச்சமின்றி நடமாடப் போலீஸ் ரோந்து பணிகள் அதிகரிக்கப்படும்.
ஓமலூர், தீவட்டிப்பட்டி, கருப்பூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்த பிரேமலதா, நாளை ஏப்ரல் 13ம் தேதி சேலம் மேற்குத் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் மற்றும் வீரபாண்டி திமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் தருண் ஆகியோரை ஆதரித்துப் பிரசாரம் செய்ய உள்ளார்.
