"எல்லாத்தையும் நம்பாதீங்க... சமூக வலைதளங்களில் 90% பொய்” - அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!

 
ஜெகதீஸ்வரி

சமூக வலைதளங்களில் வரும் அனைத்துச் செய்திகளையும் பொதுமக்கள் அப்படியே நம்பிவிட வேண்டாம் என்றும், உண்மைத்தன்மை அறியாமல் தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, சமூக வலைதளங்களின் எதிர்மறைத் தாக்கங்கள் குறித்துப் பேசினார்.

"தற்போது சோஷியல் மீடியாவில் உலா வரும் செய்திகளில் சுமார் 90% தகவல்கள் முற்றிலும் பொய்யானவை மற்றும் திட்டமிட்டுப் பரப்பப்படுபவை. எனவே, சமூக வலைதளங்களில் வரும் எந்தச் செய்தியையும் அப்படியே கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் ஜெகதீஸ்வரி

செய்தியின் உண்மைத்தன்மையை முழுமையாக ஆராயாமல், அதை மற்றவர்களுக்குப் பகிரவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

எதிர்க்கட்சிகள் பரப்பி வரும் போலிச் செய்திகள் மற்றும் அவதூறுகள் குறித்துத் தனது வேதனையையும் அவர் வெளிப்படுத்தினார். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து செய்து வரும் அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் பொய்யான பிரச்சாரங்களால் தினமும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுவதாகவும், இதனால் திட்டமிட்டபடி மக்களை நேரில் வந்து சந்திக்க இயலாமல் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் மீது தினமும் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வரும் பல்வேறு அவதூறுகளையும் பொய்ப் பிரச்சாரங்களையும் பொருட்படுத்தாமல், அதனையெல்லாம் கடந்து அரசுத் தரப்பில் தொடர்ந்து மக்கள் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.