நிலக்கரியை எரிக்க வேண்டாம்... இனி புகையில்லா மின்சாரம் - சீனாவின் ‘ஜீரோ-கார்பன்’ தொழில்நுட்பம் சாதனை!

 
நிலக்கரி நிலக்கரி

வழக்கமான அனல் மின் நிலையங்களில் நிலக்கரியைப் போட்டு எரித்து, அதன் மூலம் கிடைக்கும் வெப்பத்தைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் முறைக்குச் சீன ஆராய்ச்சியாளர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். ஷென்சென் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நிலக்கரியை நேரடியாக மின்சாரமாக மாற்றும் புதிய வகை 'எரிபொருள் மின்கலத்தை' (Fuel Cell) உருவாக்கிச் சாதனை படைத்துள்ளனர்.

பாரம்பரிய அனல் மின் நிலையங்களில் நிலக்கரி எரிக்கப்படும்போது டன் கணக்கில் கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் நச்சுப் புகைகள் வெளியேறும். ஆனால், சீனாவின் இந்தப் புதிய முறையில்: நிலக்கரி எரிக்கப்படுவதில்லை. மாறாக, ஒரு மின்கலத்திற்குள் நிலக்கரி வைக்கப்பட்டு, அங்கு நடைபெறும் மின்வேதியியல் வினைகள் மூலம் நேரடியாக எலக்ட்ரான்கள் பிரிக்கப்பட்டு மின்சாரம் பெறப்படுகிறது.

மின்சாரம்

நீரைச் சூடாக்கி, நீராவியை உருவாக்கி, அதன் மூலம் டர்பன்களைச் சுழற்றி மின்சாரம் தயாரிக்கும் சிக்கலான மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வழிமுறைகள் இதில் தவிர்க்கப்படுகின்றன. நிலக்கரியைப் பயன்படுத்தினாலும், இந்த முறையில் புகையோ அல்லது சாம்பலோ வெளியேறாது. இதனால் காற்று மாசுபாடு முற்றிலும் தடுக்கப்படுகிறது. வழக்கமான அனல் மின் நிலையங்களை விட, இந்த மின்வேதியியல் முறையில் மிக அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். நிலக்கரியை எரிப்பதற்கான பிரம்மாண்டமான உலைகள் மற்றும் புகைக் குழாய்கள் தேவையில்லை என்பதால், உட்கட்டமைப்புச் செலவு பெருமளவு குறையும்.

நிலக்கரி

சீனாவின் இந்தத் தொழில்நுட்பம் வெற்றிபெற்றால், இந்தியா மற்றும் சீனா போன்ற நிலக்கரியை அதிகம் நம்பியிருக்கும் நாடுகள், தங்களின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காமல் 'நிகர பூஜ்ஜிய உமிழ்வு' (Net Zero Emission) இலக்கை எளிதில் அடைய முடியும். குறிப்பாக, உலக நாடுகள் கார்பன் வரி விதித்து வரும் சூழலில், இந்த 'க்ளீன் கோல்' தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதமாகும்.