"மக்கள் குரலை நசுக்காதீர்கள்"... பாடகர் அறிவு கைதுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

 
பாடகர் அறிவு உதயநிதி

நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பிரபல ராப் பாடகர் 'தெருக்குரல்' அறிவைக் காவல்துறையினர் கைது செய்ததற்குத் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிரான மக்களின் நியாயமான உணர்வுகளை ஒடுக்காமல், அரசு அதற்குச் செவிமடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாடகர் அறிவு கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். "நீட் தேர்வு என்பது தொடக்கம் முதலே முறைகேடுகள் நிறைந்த ஒரு மிகப்பெரிய மோசடியாகவே இருந்து வருகிறது. அதற்கு எதிராக எழும் மக்களின் நியாயமான குரல்களை ஒடுக்க நினைப்பது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை ஆகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராப் பாடகர் 'தெருக்குரல்' அறிவு

அடக்குமுறைகள் மூலம் மக்களின் உணர்வுகளை ஒருபோதும் நசுக்கிவிட முடியாது என்றும், போராட்டக்காரர்களைக் கைது செய்வதை விட்டுவிட்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்க வேண்டும் என்றும் அவர் சாடியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகம் முன்பாக நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்டுப் போராட முயன்ற பாடகர் அறிவு உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குரல் கொடுத்துள்ளது அரசியல் களத்தில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.