"எங்க வரலாற்றைச் சிதைக்காதே"... 'ஜனநாயகன்' படத்திற்கு எதிராகப் பாப்பாபட்டியில் கருப்புக் கொடிப் போராட்டம்!

 
ஜனநாயகன் ஜனநாயகன்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு எதிராக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிராம மக்கள் ஒன்று திரண்டு கருப்புக் கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் முன்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வரலாற்று நிகழ்வுகளை, 'ஜனநாயகன்' திரைப்படத்தில் உண்மைக்கு மாறாகச் சித்தரித்துள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்படத்தின் இயக்குனர் எச்.வினோத் மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் இந்தப் பகுதி மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் காட்சிகளை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சமூக ஆர்வலர்கள் மற்றும் ஃபார்வர்ட் பிளாக் கட்சியினரும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

ஜனநாயகன்

பாப்பாபட்டி, பசுக்காரன்பட்டி, பேயம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று திரண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். வீடுகளில் கருப்புக் கொடி: தங்களின் வீடுகள் தோறும் கருப்புக் கொடி கட்டிப் போராட்டத்தைத் தொடங்கினர்.

சர்ச்சைக்கிரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், பொது வெளியில் இயக்குனர் மற்றும் நடிகர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கோஷங்களை எழுப்பினர்.

ஏற்கனவே இத்திரைப்படம் தணிக்கை வாரியச் சிக்கல்களையும், இணையத்தில் கசிந்த அதிர்ச்சியையும் சந்தித்து வரும் நிலையில், தற்போது மக்கள் போராட்டமும் சேர்ந்துள்ளது படக்குழுவினருக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இன்று மாலை தான் படத்தின் சென்சார் தொடர்பான இறுதி முடிவு வெளியாகவுள்ளது.

ஜனநாயகன்  

நிஜமான கிராமங்களின் பெயர்களையோ அல்லது அங்கு நடந்த உண்மைச் சம்பவங்களையோ திரையில் காட்டும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

பாப்பாபட்டி போன்ற பகுதிகளில் நிலவிய ஜனநாயகச் சிக்கல்களைக் கையாண்ட விதம் குறித்துப் படக்குழுவினர் விளக்கம் அளிப்பார்களா அல்லது அந்தத் தடையை நீக்கக் காட்சிகளில் மாற்றங்களைச் செய்வார்களா என்பது இனி வரும் நாட்களிலேயே தெரியவரும்.