"எனது கணவரைத் தேவையில்லாமல் இழுக்க வேண்டாம்" - சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. லீமா ரோஸ் ஆவேசம்!
சட்டமன்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது லாட்டரி தொழில் குறித்துப் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், தனது கணவரைத் தேவையில்லாமல் இதில் தொடர்புபடுத்த வேண்டாம் என்று லால்குடி எம்.எல்.ஏ. லீமா ரோஸ் பேசியுள்ளார்.
சட்டசபையில் இயற்கை வளங்கள், தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதத்தின் போது, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட உறுப்பினர்கள் லாட்டரி விவகாரம் குறித்துப் பேசினர்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய லீமா ரோஸ், "அண்ணா ஆட்சிக் காலத்தில் இருந்தே லாட்டரி தொழில் நடைமுறையில் உள்ளது. எனது கணவர் வெளிமாநிலத்தில் சட்டப்பூர்வமாக உரிமம் பெற்று, அரசுக்குச் சரியாக வரி செலுத்தியே தொழில் செய்து வருகிறார்" எனக் குறிப்பிட்டார்.
சிலர் தங்களது பழைய தவறுகளை மறைப்பதற்காகவே லாட்டரி விவகாரத்தைத் தொடர்ந்து பேசி, இந்தத் தொழிலைக் கொச்சைப்படுத்துவதாக அவர் சாடினார்.

தாங்கள் எந்தவித சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும், குறிப்பிட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டிய சூழலில், தேவையில்லாமல் தனது கணவரின் பெயரை விவாதத்திற்குள் இழுக்கக் கூடாது என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
