"எங்களை விலை பேசுறதாக இருந்தால் ஊருக்குள் நுழையாதீங்க... ஓட்டு விற்பனைக்கு அல்ல... " கெத்து காட்டிய மீனவ கிராமம்!
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராம மக்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு, அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கக் காரைக்கால் கிளிஞ்சல்மேடு செட்டியார் கிராம மக்கள் ஒன்றிணைந்து ஒரு முன்மாதிரியான முடிவை எடுத்துள்ளனர்.
கிளிஞ்சல்மேடு செட்டியார் கிராமப் பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஊர் முகப்பில் ஒரு பெரிய எச்சரிக்கை பேனரை வைத்துள்ளனர். அதில், தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளரும் வாக்காளர்களுக்குப் பணமோ அல்லது பரிசுப் பொருட்களோ வழங்கக் கூடாது. கிராம மக்கள் எவரும் வேட்பாளர்களிடம் இருந்து எதையும் பெற்றுக் கொள்ளக் கூடாது. மீறி பணம் கொடுப்பவர்கள் அல்லது வாங்குபவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கிராமத்தின் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

"லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றமே" என்பதை உரக்கச் சொல்லும் அக்கிராம மக்கள், வேட்பாளர்களுக்கு ஒரு முக்கியக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். "எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல. எங்களுக்குப் பணத்தைத் தந்து ஏமாற்றாமல், எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உருப்படியான திட்டங்களை முன்னெடுங்கள்."
ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கில் வைக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்புப் பலகை, தற்போது காரைக்கால் மாவட்டம் முழுவதும் பெரும் விவாதத்தையும் பாராட்டையும் பெற்று வருகிறது. மற்ற கிராமங்களுக்கும் இது ஒரு சிறந்த முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.
