“ஜெயிச்சதும் வேறு எங்கும் போகாதீங்க... நேரா இங்கே வந்துடுங்க” - தவெக வேட்பாளர்களுக்கு விஜய் போட்ட 'ஸ்ட்ரிக்ட்' கண்டிஷன்!

 
விஜய் விஜய்

சென்னை பனையூரில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) வேட்பாளர்கள் கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் தனது 233 தொகுதி வேட்பாளர்களுக்கும் மிக முக்கியமான மற்றும் எச்சரிக்கையுடன் கூடிய கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் 233 தொகுதிகளில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் அனைவரும், இன்று மதியம் பனையூர் அலுவலகத்தில் திரண்டனர். தலைவரின் அறிவுறுத்தலின்படி, வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் அலுவலர்கள் வழங்கிய 17-சி (17-C) படிவங்களுடன் அவர்கள் வந்திருந்தனர். இந்த படிவங்களின் அடிப்படையில் ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்குகள் மற்றும் தவெக-விற்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

விஜய்

கூட்டத்தில் பேசிய விஜய், வேட்பாளர்களுக்கு மிகுந்த நம்பிக்கையூட்டும் அதே வேளையில், சில முக்கிய எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளார்: "தேர்தலில் நாம் அமோக வெற்றி பெறுவோம். வேட்பாளர்களாக நீங்கள் வெற்றிச் சான்றிதழைப் பெற்றவுடன் வேறு எங்கும் சென்றுவிடாதீர்கள். உடனடியாகப் பனையூர் அலுவலகத்திற்கு வந்துவிடுங்கள். உங்களுக்காக நான் இங்கே காத்திருப்பேன்" எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை நாளன்று முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், கடைசி நிமிடம் வரை வாக்குகளை முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

தவெக விஜய்

விஜய்யின் இந்த "வேறு எங்கும் சென்றுவிடாதீர்கள்" என்ற வார்த்தைகளுக்குப் பின்னால் மிகப்பெரிய அரசியல் எச்சரிக்கை இருப்பதாகக் கருதப்படுகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஒருவேளை பெரும்பான்மைக்குச் சில இடங்கள் தேவைப்படும் பட்சத்தில், ஆளுங்கட்சியான திமுக-வோ அல்லது பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வோ தவெக வேட்பாளர்களைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்யலாம். அத்தகைய 'குதிரை பேர'ங்களைத் தவிர்க்கவும், கட்சித் தாவல்களைத் தடுக்கவுமே விஜய் இப்போதே தனது வேட்பாளர்களுக்குப் பாதுகாப்பு வளையம் அமைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தலைவரின் நேரடிப் பேச்சு மற்றும் வெற்றி குறித்த நம்பிக்கை, முதன்முறையாகத் தேர்தலைச் சந்தித்துள்ள தவெக வேட்பாளர்களுக்குப் பெரும் தெம்பைக் கொடுத்துள்ளது. "தலைவர் எங்களுக்காகக் காத்திருக்கிறார்" என்ற உணர்வு, தங்களை மேலும் பொறுப்புடன் செயல்பட வைப்பதாக வேட்பாளர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.