'எம்.எல்.ஏ-க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் தண்ணீரை வாங்குங்கள்' - உதயநிதி கண்டனம்!

 
உதயநிதிவிஜய் உதயநிதி

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கைக் கண்டித்தும், தமிழக அரசின் மெத்தனப் போக்கைச் சாடியும் எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்க்குத் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்'  பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்திற்குத் தர வேண்டிய காவிரி நீரைத் தற்போதைக்குத் திறந்து விட முடியாது என கர்நாடக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது தமிழக விவசாயிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கர்நாடகாவின் இந்தத் தன்னிச்சையான முடிவுக்குத் தமிழக அரசு உடனடியாக எதிர்வினை ஆற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உதயநிதி சட்டப்பேரவை

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க ₹35 கோடி குதிரை பேரம் பேசப்பட்டதாக எழுந்துள்ள அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து முதலமைச்சரை உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தங்களது பக்கம் இழுப்பதிலும், குதிரை பேரங்களில் ஈடுபடுவதிலும் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்காமல், கர்நாடகாவிடமிருந்து சட்டப்படி தமிழகத்திற்கு வர வேண்டிய காவிரித் தண்ணீரை முழுமையாகப் பெற்றுத் தருவதிலும் முதலமைச்சர் தனது கவனத்தைச் செலுத்த வேண்டும்.

ஏற்கனவே கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற போலி வாக்குறுதியை அளித்துத் தமிழக விவசாயிகளை இந்த அரசு ஏமாற்றியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் குறுவைச் சாகுபடிக்குத் தண்ணீர் இன்றிப் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், கர்நாடக அமைச்சரின் இந்தத் திமிரான பேச்சுக்கு முதலமைச்சரிடம் என்ன பதில் இருக்கிறது?

உதயநிதி விஜய்

கர்நாடக அரசின் இத்தகைய பிடிவாதப் போக்கை முறியடித்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்குரிய தண்ணீரை உடனடியாகப் பெற முதலமைச்சர் விஜய் நேரடியாகத் தலையிட்டு உரிய அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். தவெக எம்.எல்.ஏ-க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரம் ஒருபுறம் தீவிரமடைந்து வரும் வேளையில், காவிரி நீர் அரசியலும் தமிழகத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.