“வீடுகளை விட்டு வெளியேறாதீங்க...” - வெள்ளக்காடாக மிதக்கும் புதுச்சேரி - கலெக்டர் அவசர அறிவுறுத்தல்!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புதுச்சேரியில் கடந்த சில தினங்களாகக் கனமழை முதல் மிக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர் மழை காரணமாகப் புதுச்சேரியின் தாழ்வான பகுதிகள் மற்றும் முக்கியச் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து, பகுதி முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்குக்கூடப் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் முக்கிய எச்சரிக்கைகளும் வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

தேவையின்றி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வதைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும். பலவீனமான அல்லது பாதுகாப்பற்ற வீடுகளில் வசிப்பவர்கள், அசம்பாவிதங்களைத் தவிர்க்க உடனடியாக அருகில் உள்ள அரசு நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டும்.
கடற்கரை, நீர்நிலைகள், ஓடைகள், நீர் தேங்கியுள்ள பகுதிகள் மற்றும் ஆற்றுப் பகுதிகளுக்குப் பொதுமக்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வெள்ள நீர் பெருகியுள்ள ஆபத்தான இடங்களில் நின்று புகைப்படம் அல்லது செல்ஃபி எடுக்கும் சாகசங்களில் ஈடுபடக் கூடாது.

மின்கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளைத் தொடக்கூடாது. மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் உடனடியாக மின்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றி, குடும்பத்தின் பாதுகாப்பிற்கு முதலிடம் அளிக்க வேண்டும்.
புதுச்சேரி நிர்வாகம் சார்பில் மீட்புக் குழுவினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, வெள்ள நீரை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கி விடப்பட்டுள்ளன.
