“யாரும் வராதீங்க...” - லண்டனில் திடீரென ரத்தான முதல்வர் விஜய் நிகழ்ச்சி!

 
விஜய் மகிழ்ச்சி

தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து நாட்டிற்குச் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் லண்டனில் தங்கியிருந்த போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்ட காரணத்தால் அவரது சந்திப்பு நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். அவர் லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்திப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் அவர் தங்கியிருக்கும் ஓட்டல் எதிரே உள்ள வீதிகளில் திரண்டு "TVK TVK" எனப் பெருகுரலில் முழக்கங்களை எழுப்பினர்.

வ்

விஜய் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு அருகே லண்டன் பிரிட்ஜ் ரயில் நிலையமும், முக்கிய மருத்துவமனையும் அமைந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பான போக்குவரத்துக்குத் தொண்டர்கள் இடையூறாக இருந்தனர். இதனைக் கட்டுப்படுத்திய லண்டன் காவல்துறையினர், அனைவரையும் கலைந்து செல்லுமாறு மைக் மூலம் அறிவுறுத்தினர்.

இந்நிலையில் நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சருடன் சென்ற பாதுகாப்பு அதிகாரியான தர்மராஜ் ஐபிஎஸ்-ம் லண்டன் போலீசாருடன் இணைந்து மைக் மூலம் அனுமதி மறுக்கப்பட்டதால் அனைவரும் கலைந்து செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

பொதுமக்களின் பாதுகாப்பையும், லண்டன் மாநகரக் காவல்துறையின் வேண்டுகோளையும் ஏற்று முதலமைச்சரால் மக்களைச் சந்திக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஓட்டல் வாசலிலோ அல்லது அவர் செல்லும் வழிகளிலோ யாரும் காத்திருக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.