மிஸ் பண்ணாதீங்க... இன்றிரவு வானில் தோன்றும் தங்க நிற ஸ்ட்ராபெர்ரி மூன் - வெறும் கண்களால் பார்க்கலாம்!
இன்று ஜூன் 29 ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு, வானியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் அரிய ‘ஸ்ட்ராபெர்ரி மூன்’ எனப்படும் விந்தையான பொன் நிற நிலவு இன்று மாலை வானில் தோன்றவுள்ளது.
இந்த நிலவின் பெயரைக் கேட்டதும் இது ஸ்ட்ராபெர்ரி பழத்தைப் போலச் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் எனப் பலரும் நினைக்கலாம். ஆனால், உண்மை அதுவல்ல. இன்று மாலை வானில் உதிக்கும் இந்த பௌர்ணமி நிலவு, அலைநீளக் கோட்பாடுகளின்படி வளிமண்டலக் காற்று அடுக்குகள் வழியே ஊடுருவி வரும் போது, வழக்கத்திற்கு மாறாகத் தங்க நிறத்தில் பிரகாசமாக ஜொலிக்கும்.
அமெரிக்காவின் பூர்வகுடி மக்கள், ஜூன் மாதத்தில் தான் தங்களது பகுதிகளில் விளையும் 'ஸ்ட்ராபெர்ரி' பழங்களை அறுவடை செய்யத் தொடங்குவார்கள். தங்களின் இந்த ஸ்ட்ராபெர்ரி அறுவடைப் பருவ காலத்தைக் குறிக்கும் அடையாளமாகவே, ஜூன் மாதத்தில் தோன்றும் முழு நிலவுக்கு அவர்கள் ‘ஸ்ட்ராபெர்ரி மூன்’ என்று பெயரிட்டனர். இயற்கையின் இந்த விந்தையான மற்றும் மனதைக் கவரும் விண்வெளி நிகழ்வைக் காண்பதற்குத் தனித்துவமான கண்ணாடிகளோ அல்லது தொலைநோக்கிகளோ தேவையில்லை.
இன்று மாலை நிலவு உதிக்கும் நேரத்திலிருந்து இரவு முழுவதும் இந்த பொன் நிற நிலவை பொதுமக்கள் அனைவரும் தங்களது வெற்றுக் கண்களாலேயே தெளிவாகக் கண்டு ரசிக்கலாம் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனி மாதப் பௌர்ணமி வழிபாடுகளுடன், இயற்கையின் இந்த அழகிய பொன் நிற நிலவும் இன்று இணைந்திருப்பது ஆன்மீகப் பக்தர்கள் மற்றும் விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் இரட்டை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
