மிஸ் பண்ணாதீங்க... திருப்பதி பிரம்மோற்சவம் தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை வெளியீடு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறவுள்ள ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு மற்றும் முக்கியக் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில், வரும் அக்டோபர் 12, 13, 14, 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளுக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. பக்தர்கள் https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நவராத்திரி பிரம்மோற்சவம் மற்றும் புரட்டாசி மாதத்தின் கடைசி வாரம் ஆகியவை இணைந்து வருவதால், வரும் அக்டோபர் 11 முதல் 20 வரை விஐபி பிரேக் மற்றும் சிறப்பு முன்னுரிமை தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கான சிறப்பு தரிசனங்களும் இக்காலகட்டத்தில் ரத்து செய்யப்படுகின்றன.

நெறிமுறைக்கு உட்பட்ட வி.ஐ.பி.க்களைத் தவிர, அக்டோபர் 10 முதல் 19 வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கான பரிந்துரைக் கடிதங்கள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படாது எனத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
