"ஆட்சிக்கு முன்-பின் என இரட்டை வேடம் போடாதீர்கள்" - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை மீட்கக் கடமைக்குக் கடிதம் மட்டும் எழுதாமல், உரியத் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
"ஆட்சிக்கு வருவதற்கு முன் 'மானே தேனே பொன்மானே' என எழுதினால் போதுமா என்று நம்மைக் கேட்டவர்கள், தற்போது ஆட்சிக்கு வந்த பின்பு வெறும் கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?" எனத் தனது சமூக வலைதளப் பதிவில் வினா எழுப்பியுள்ளார்.

மீனவர் விவகாரத்தில் அரசு இரட்டை வேடம் போடாமல், அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய உடனடியாகக் களத்தில் இறங்கிச் செயலாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் நீடித்து வருகிறது. இதனால் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், மத்திய அரசுக்கு வெறும் கடிதங்களை அனுப்பிக் கொண்டிருக்காமல், தூதரக ரீதியிலான அழுத்தங்களைக் கொடுத்து மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
