தேர்தல் நேரம்னு மக்களை ஆபத்துல விடாதீங்க... தமிழக வனத்துறைக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!
கோயம்புத்தூர் மாவட்டம் கக்குராயன் மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகச் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது குறித்து தமிழக பாஜவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் முக்கியப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வனத்துறை அதிகாரிகள் வெறும் பெயரளவில் தேடுதல் நடத்தாமல், அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விஞ்ஞானபூர்வமான முறையில் சிறுத்தையின் இருப்பிடத்தைக் கண்டறிய வேண்டும். சிறுத்தையைப் பிடிக்கப் போதுமான கூண்டுகள் மற்றும் பாதுகாப்பு வலைகளை அமைத்து, அதனைப் பாதுகாப்பாகப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிப்பாளையம் கக்குராயன் மலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 20 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரிய வந்துள்ளது. வனத்துறையும், கிராம மக்களும், சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்து, கிட்டத்தட்ட ஒரு வார காலம் கடந்து விட்டது.… pic.twitter.com/iMLIG6BMz7
— K.Annamalai (@annamalai_k) April 3, 2026
தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசு இயந்திரம் அதில் மட்டும் கவனம் செலுத்தாமல், மக்களின் உயிர் பாதுகாப்பு விஷயத்திலும் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கக்குராயன் மலைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சி வருகின்றனர். ஏற்கனவே கால்நடைகள் சிலவற்றைச் சிறுத்தை தாக்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அண்ணாமலையின் இந்தப் பதிவு வனத்துறையினருக்குப் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலையின் கோரிக்கையைத் தொடர்ந்து, கக்குராயன் மலைப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், கூடுதல் வனக்காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
