“நடிகர்கள் பின்னால் ஓடி வாழ்க்கையைத் தொலைக்காதீர்கள்!” - ரஜினிகாந்த் உருக்கமான வேண்டுகோள்!

 
ரஜினிகாந்த் ரஜினிகாந்த்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், இளைஞர்கள் தங்களது உடல்நலம் மற்றும் கல்வியில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். குறிப்பாகப் போதைப் பழக்கங்களுக்கு எதிராக அவர் விடுத்த எச்சரிக்கை தற்போது வைரலாகி வருகிறது.

சமீபகாலமாகப் பிடித்தமான நடிகர்களின் வாகனங்களை ரசிகர்கள் பின்தொடர்ந்து சென்று விபத்துகளில் சிக்குவது அதிகரித்து வருகிறது. இது குறித்த கேள்விக்கு ரஜினி பதிலளிக்கையில், “நடிகர்களின் வாகனங்களுக்குப் பின்னால் பின்தொடர்ந்து சென்று கீழே விழுந்து அடிபட்டால், அது உங்களுக்குத்தான் காயம். அந்த நேரத்தில் யாரும் வந்து உதவ மாட்டார்கள். இளைஞர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்,” என எச்சரித்தார்.

“படிக்கும் வயதில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். அந்த நேரத்தை விட்டுவிட்டால் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுவீர்கள்” என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப் பழக்கம் குறித்துக் கவலை தெரிவித்த அவர், “தயவுசெய்து மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாகக் கூடாது. அது உங்கள் வாழ்க்கையை நரகமாக்கிவிடும். உடல் ஆரோக்கியத்தில் எப்போதும் அக்கறை செலுத்த வேண்டும்” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இணையும் படம் குறித்த முக்கியத் தகவலையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

 நடிகர்   ரஜினிகாந்த்

“நானும் கமலும் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும்,” என்று கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் இந்தியத் திரையுலகிலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்த கேள்விக்கு, தான் அதுகுறித்து எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை என ரஜினிகாந்த் தவிர்த்துவிட்டார்.