"இந்தி எதிர்ப்புக்காக இனி ஒரு உயிரும் போக வேண்டாம்!" - முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்!
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, ரயில் முன் பாய்ந்து படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மே 17 இயக்க நிர்வாகி சிவக்குமார் (சிவா திலீபன்) மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மொழிப்போர் தியாகிகளின் வரிசையில் மற்றுமொரு தம்பி சிவக்குமார் இணைந்திருப்பது நெஞ்சைப் பிளக்கிறது. இந்தித் திணிப்பை நாம் நமது மதிநுட்பத்தாலும், உறுதியான போராட்டத்தாலும் வெல்வோம். அதற்கு உயிர்களை இழக்க வேண்டிய அவசியமில்லை. இனி ஒரு உயிரும் இப்போராட்டத்தில் போக வேண்டாம்," என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக அரசு எப்போதும் இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பதாகவும், இந்தித் திணிப்பை ஒருபோதும் அனுமதிக்காது என்றும் கூறியுள்ளார். சிவக்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மே 17 இயக்கத் தோழர்களுக்கும் முதல்வர் தனது ஆறுதலைத் தெரிவித்துள்ளார்.
