'ஜனநாயகன்' விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடாதீங்க... "படம் லீக்கானால் மத்திய அரசு என்ன செய்யும்?" - ஆதவ் அர்ஜுனாவைச் சீண்டிய சரத்குமார்!
'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவுக்கு பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் குறை கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தவெக-வின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா, 'ஜனநாயகன்' படம் லீக் ஆனதற்கு பாஜக மற்றும் திமுக தான் காரணம் என பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு ஏற்கனவே பாஜக-வின் வினோஜ் பி.செல்வம் பதிலடி கொடுத்திருந்த நிலையில், தற்போது நடிகரும் பாஜக மூத்த தலைவருமான சரத்குமார் இக்களத்தில் இறங்கியுள்ளார்.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், "ஒரு திரைப்படம் இணையத்தில் கசிவது என்பது தொழில்நுட்ப ரீதியான கோளாறு அல்லது யாரோ செய்த திருட்டு வேலை. இதற்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? ஒவ்வொரு முறை ஏதாவது சிக்கல் வரும்போதும் மத்திய அரசை நோக்கி விரல் நீட்டுவதை ஆதவ் அர்ஜுனா நிறுத்திக்கொள்ள வேண்டும்."
"படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததற்கும், படம் லீக் ஆனதற்கும் அரசியல் சாயம் பூசி, அதன் மூலம் அனுதாபத்தைப் பெற்று அரசியல் ஆதாயம் தேட வேண்டாம். திரைத்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவன் என்ற முறையில் சொல்கிறேன், தயாரிப்புத் தரப்பிலிருந்து அல்லது லேபிலிருந்துதான் இது போன்ற கசிவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதை விடுத்து வீணாக பாஜக மீது பழி சுமத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்."

தமிழக வெற்றிக் கழகம் முதன்முதலாகச் சந்திக்கும் இந்தச் சட்டமன்றத் தேர்தல் களத்தில், அக்கட்சியின் ஆதரவு பெற்றதாகக் கருதப்படும் 'ஜனநாயகன்' படம் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. ஒருபுறம் படம் லீக் ஆன ஆதங்கம், மறுபுறம் பாஜக-வின் இந்தத் தொடர் பதிலடிகள் எனத் தமிழக அரசியல் களம் அனல் பறக்கிறது.
சரத்குமாரின் இந்த விமர்சனம் தவெக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே 'கமெண்ட்' போர் தொடங்கிவிட்டது.
