‘இந்த புத்தகத்தைத் திருடாதீங்க’ - செயற்கை நுண்ணறிவு(AI)க்கு எதிராக 10,000 எழுத்தாளர்கள் 'வெற்று காகிதங்களினாலான’ புத்தகம் வெளியிட்டு போராட்டம்!

 
ஏஐ இந்த புத்தகத்தைத் திருடாதீங்க ஏஐ இந்த புத்தகத்தைத் திருடாதீங்க

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களான கசுவோ இஷிகுரோ, பிலிப்பா கிரிகோரி மற்றும் ரிச்சர்ட் ஆஸ்மான் உள்ளிட்ட சுமார் 10,000 எழுத்தாளர்கள், செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் "படைப்புத் திருட்டைக்" கண்டித்து ஒரு நூதனமான போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். லண்டன் புத்தகக் கண்காட்சியில் 'இந்தப் புத்தகத்தைத் திருடாதீர்கள்' (Don’t Steal This Book) என்ற தலைப்பில் உள்ளடக்கமே இல்லாத, வெறும் வெற்று காகிதங்களை உள்ளடக்கி ஒரு புத்தகத்தை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த நூலில் எழுத்தாளர்களின் பெயர்ப்பட்டியல் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இது ஒரு குறியீட்டு ரீதியான போராட்டமாகும்.

செயற்கை நுண்ணறிவுத் துறையானது எழுத்தாளர்களின் அனுமதியோ, அவர்களுக்குரிய ஊதியமோ வழங்காமல், அவர்களின் படைப்புகளைத் தரவுகளாகப் பயன்படுத்திப் பயிற்சி அளிக்கப்படுகிறது. எழுத்தாளர்களின் படைப்புகளை வைத்தே அவர்களுக்குப் போட்டியாகச் செயல்படும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை உருவாக்குவது, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயல் எனப் படைப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருட்டு

பிரிட்டிஷ் அரசாங்கம் பதிப்புரிமைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவர உள்ள சூழலில், இந்தத் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. இங்கிலாந்து அரசாங்கம் இன்று இது தொடர்பான பொருளாதாரத் தாக்க மதிப்பீட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எட் நியூட்டன்-ரெக்ஸ் கூறுகையில், "செயற்கை நுண்ணறிவுத் துறை என்பது மற்றவர்களின் திருடப்பட்ட உழைப்பின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது" என்று விமர்சித்துள்ளார். "எங்கள் புத்தகங்களைப் பயன்படுத்துவதற்காக AI நிறுவனங்கள் பணம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையிலும் நியாயமற்றது அல்ல" என மலோரி பிளாக்மேன் தெரிவித்துள்ளார். பதிப்புரிமைச் சட்டத்தில் தளர்வு கொண்டுவரும் அரசின் திட்டத்தை இசைக்கலைஞர் எல்டன் ஜான் கடுமையாகச் சாடியுள்ளார்.

திருட்டு

பதிப்புரிமைச் சட்டம் தொடர்பாக அமைச்சர்கள் நான்கு முக்கிய வழிகளைப் பரிசீலித்து வருகின்றனர். எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே விடுவது. AI நிறுவனங்கள் படைப்புகளைப் பயன்படுத்த உரிமம் பெறுவதைக் கட்டாயமாக்குவது. படைப்பாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கும் வாய்ப்பின்றி AI நிறுவனங்களை அனுமதிப்பது. எழுத்தாளர் வேண்டாம் என்று தெரிவிக்காவிட்டால், அவர் படைப்பை AI பயன்படுத்திக் கொள்ளலாம் என அனுமதிப்பது.