"ரீல்ஸ் மோகத்திற்குப் பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீங்க" - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
தமிழக அரசுப் பள்ளி ஒன்றில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில், 'ரீல்ஸ் அமைச்சர்' ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் மிகுந்த அதிர்ச்சியையும் அருவருப்பையும் அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
தவெக அரசின் தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வரும் கீர்த்தனா, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, வகுப்பறையில் இருந்த மாணவிகளிடம் அமைச்சர் கீர்த்தனா ஆங்கிலத்தில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதற்கு அங்கிருந்த பிஞ்சுக் குழந்தைகள் மற்றும் மாணவிகள் பதிலளிக்கத் தெரியாமல் அச்சத்துடன் திணறியுள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்களைத் திணறடித்து, ஆசிரியர்களைக் குறை கூறிய தவெக கீர்த்தனா..🤦♂️👇 pic.twitter.com/chp3V0AUF4
— நீதிமான் (@Neethiman3) July 6, 2026
மாணவிகள் பதிலளிக்கத் திணறிய இந்த முழு நிகழ்வும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வெளியானது. பிஞ்சுக் குழந்தைகளின் அறியாமையை விளம்பரப்படுத்தும் நோக்கில் இந்த வீடியோ அமைந்திருந்ததாக சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்த விவகாரம் தொடர்பாகத் தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சரின் இத்தகைய செயல்பாட்டை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
"அரசுப் பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. இது மிகவும் உணர்வற்ற செயலாகும் (It is grossly insensitive). மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தெந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் பாடம் எடுக்க வேண்டும்.

நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது முதன்மையான வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களுடைய விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். சுய விளம்பர ரீல்ஸ் மோகத்திற்குப் பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்."
அரசுப் பள்ளி மாணவிகளைத் தேவையற்ற மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியதாகத் தவெக அமைச்சர் மீது எழுந்துள்ள இந்தச் சர்ச்சை மற்றும் அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ள முற்போக்கான கண்டனம் தற்பொழுது தமிழக அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
