“ரூ.1,000 தரக்கூட மனமில்லையா? இது தான் மாற்றமா?” - ஸ்டாலின் சரமாரி கேள்வி!

 
ஸ்டாலின் விஜய் ஸ்டாலின் விஜய்

மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தைக் கண்டித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராகக் கடுமையான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

மறுசீரமைப்பு என்ற பெயரில் திட்டத்தைத் தள்ளிப்போடும் தவெக அரசின் முடிவை விமர்சித்துள்ள மு.க.ஸ்டாலின், "தேர்தல் நேரத்தில் மாதம் ரூ.2,500 தருவோம் என்று சொல்லிவிட்டு, இப்போது ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாயைக் கூடத் தராமல் இழுத்தடிப்பதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா?" எனச் சாடியுள்ளார்.

விஜய்

"மே மாதத்திற்கான தொகையை 15-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். நடைமுறையில் உள்ள ஒரு திட்டத்தைத் தொடர இப்போது எதற்குப் புதிய கால அவகாசம்? இதில் என்ன மறுசீரமைப்பு செய்யப் போகிறீர்கள்?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

"நேற்றுதான் சட்டப்பேரவையில் 'திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்' என்று உறுதி அளித்தீர்கள். ஆனால், அடுத்த 24 மணி நேரத்திலேயே மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி வைப்பது ஏன்?" என அவர் பதிவிட்டுள்ளார்.

விஜய்

புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு திமுக மற்றும் தவெக இடையே நடைபெறும் இந்த வார்த்தைப் போர், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'புதுமைப்பெண்' மற்றும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டங்களுக்கு இன்று பணம் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், மகளிர் உரிமைத் தொகை மட்டும் ஏன் தள்ளிப்போகிறது என்ற விவாதம் இல்லத்தரசிகள் மத்தியிலும் எழுந்துள்ளது.