“தமிழில் ஒரு வினாகூட இல்லையா?” - எஸ்.ஐ. தேர்வு முடிவுக்குத் தடை விதித்து உயர் நீதிமன்றம் ஆவேசம்!

 
உயர்நீதிமன்ற மதுரை கிளை

தமிழகத்தில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு நடைமுறைகளில் தமிழ் மொழி வினாக்கள் புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளதுடன், தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடையும் விதித்துள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய எஸ்.ஐ. தேர்வில், பாடத்திட்டத்தின்படி தமிழ் வினாக்கள் கேட்கப்படவில்லை எனக் கூறி தொடரப்பட்ட வழக்கில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி மற்றும் ஆனந்தராஜா ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், "எஸ்.ஐ. தேர்வுக்கான 'பிரிவு பி' பாடத்திட்டத்தில் தமிழ் வினாக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்வில் ஒரு தமிழ் வினாகூட கேட்கப்படவில்லை. மாறாக உளவியல் பகுதியில் 10 வினாக்கள் கூடுதலாகக் கேட்கப்பட்டுள்ளன. இது தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

குரூப் தேர்வு டிஎன்பிஎஸ்சி

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி. புகழேந்தி, அரசுத் தரப்பிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்: "தேர்வுக்கான பாடத்திட்டத்தை வழங்கிவிட்டு, அதிலிருந்து வினாக்கள் கேட்கப்படும் என்று கூறிவிட்டு, ஒரு வினாகூட தமிழில் கேட்கவில்லை என்றால் எப்படி? "பாடத்திட்டத்திற்காக மாணவர்கள் நேரத்தைச் செலவழித்துத் தயாராகிறார்கள். கடந்த ஆண்டுகளில் 10 வினாக்கள் வரை கேட்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஏன் ஒரு வினாகூட இல்லை? தமிழ் மொழி பயின்றோருக்கு ஒரு மதிப்பெண் கூட அவர்களது வெற்றி - தோல்வியைத் தீர்மானிக்கலாம் அல்லவா?"

எஸ்.ஐ. தேர்வு

சுமார் 1.38 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளதாகவும், தமிழ் தகுதித் தேர்வில் ஏற்கனவே 100 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பாடத்திட்டத்தைத் தாண்டி வினாக்கள் கேட்கப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பைத் தள்ளிவைத்தார். அதுவரை, அதாவது அடுத்த 10 நாட்களுக்கு எஸ்.ஐ. தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டாம் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.