'டோரேமான்' பட இயக்குநர் சுடோமு ஷிபாயாமா காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்!

 
'டோரேமான்' சுடோமு ஷிபாயாமா 'டோரேமான்' சுடோமு ஷிபாயாமா

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான குழந்தைகளின் ஃபேவரைட் அனிமேஷன் கதாபாத்திரமான 'டோரேமான்' (Doraemon) திரைப்படங்களின் புகழ்பெற்ற இயக்குநர் சுடோமு ஷிபாயாமா காலமானார். அவருக்கு வயது 84. 

ஜப்பானிய அனிமேஷன் துறையின் ஜாம்பவான்களில் ஒருவரான சுடோமு ஷிபாயாமா, வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகத் தனது 84-வது வயதில் இயற்கை எய்தினார். இவரது மறைவு சர்வதேச அனிமேஷன் உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

டோரேமான்

1983ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை வெளியான 22 டோரேமான் திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். எதிர்காலத்திலிருந்து வந்த இயந்திரப் பூனை 'டோரேமான்' மற்றும் சிறுவன் 'நோபிட்டா' ஆகியோரின் நட்பை மிக அழகாகத் திரையில் வடித்தவர்.

ஜப்பானைத் தாண்டி இந்தியா, குறிப்பாகத் தமிழகக் குழந்தைகளிடையே 'டோரேமான்' தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு இவரது நுணுக்கமான இயக்கமே முக்கியக் காரணமாகும். டோரேமான் மட்டுமின்றி, ஜப்பானின் மற்றுமொரு புகழ்பெற்ற அனிமேஷன் தொடரான 'சிபி மருக்கோ-சான்' மற்றும் 'ராக்மேன்' போன்ற தொடர்களிலும் இவர் பணியாற்றி முத்திரை பதித்துள்ளார். 

டோரேமான்

அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இறுதிச் சடங்குகள் மிக நெருக்கமான உறவினர்களுடன் எளிமையாக நடைபெறும் என்றும், அவருக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் மலர்வளையங்களோ அல்லது பணமுடிப்புகளோ கொண்டு வர வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கற்பனைத் திறனை அனிமேஷன் தொழில்நுட்பத்துடன் இணைத்து, எளிய மனித உணர்வுகளைக் கதைகளாகச் சொன்ன ஷிபாயாமாவின் மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள அனிமேஷன் கலைஞர்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.