டபுள் சந்தோஷம்... அனிருத் - காவ்யா மாறன் திருமணம் அதிகாரப்பூர்வத் தகவல்.. அழைப்பிதழ்கள் வழங்கும் பணி தீவிரம்!
தமிழ் சினிமா உலகில் முன்னணி இசையமைப்பாளராகத் திகழும் அனிருத் ரவிச்சந்தரும், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைச் செயல் அதிகாரியுமான காவ்யா மாறனும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கடந்த காலங்களில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. அந்த நேரத்தில், அத்தகைய தகவல்கள் முற்றிலும் வதந்தி எனத் தெரிவித்து அனிருத் தனது எக்ஸ் தளத்தில் மறுப்புத் தெரிவித்து அமைதியாக இருக்கக் கோரியிருந்தார்.
இந்நிலையில், தற்போது இவர்களின் திருமணம் மற்றும் வரவேற்பு குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் நவம்பர் 21-ம் தேதி அன்று சென்னையில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களை விநியோகிக்கும் பணிகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியும் காவ்யா மாறனின் தாயாருமான காவேரி மாறன் ஆகியோர் நேரில் சென்று முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள இல்லத்திற்குச் சென்று, தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் குடும்பத்தினர் நேரில் சந்தித்தனர். அப்போது வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியிடம் நேரில் வழங்கிக் குடும்பத்துடன் கலந்துகொள்ளுமாறு அவர்கள் அன்போடு அழைப்பு விடுத்தனர். இந்தச் சந்திப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருவதுடன், பிரபலங்களின் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
