20 ஆண்டு பகை... தந்தை மற்றும் மகன் துடிதுடிக்கக் கொல்லப்பட்ட இரட்டைக் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது!

 
nellai

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய காளிமுத்து என்ற விவசாயி, கடந்த 2 ஆம் தேதி மாலையில் தனது மகன்கள் சின்னத்துரை மற்றும் 5 வயது சிறுவன் ஜெயராஜுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். வீரவநல்லூர் அருகே மாதுடையார்குளம் பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஒன்று தங்களின் காரை மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி இடித்துத் தள்ளியுள்ளது. இந்த விபத்தில் 5 வயது சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், காளிமுத்துவை அந்தப் பயங்கர கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து அவரது தலையைத் துண்டித்து எடுத்துச் சென்று வீதியில் வைத்துள்ளது.

ஆம்புலன்ஸ்

நெல்லை மாவட்டத்தையே உலுக்கிய இந்த கொடூர இரட்டைக் கொலை வழக்கு குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளைப் பிடிப்பதற்காக 9 தனிப்படைகளை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த 2006 ஆம் ஆண்டில் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட சாதாரண மோதல் கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வருவது தெரியவந்துள்ளது. இந்தத் தொடர் பகையின் காரணமாக ஏற்கனவே இரு தரப்பிலும் மொத்தம் 7 பேர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது தந்தை மற்றும் மகன் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இக்கொலை வழக்குத் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், ஏற்கனவே மகேந்திரன், குமார், முத்துச்செல்வன் ஆகிய 3 பேரை அதிரடியாகக் கைது செய்திருந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த மற்றவர்களைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர், தற்பொழுது மணிகண்டன், ராஜதுரை, முத்துப்பட்டன், மகாலிங்கம் ஆகிய மேலும் 4 பேரை வலைவீசிப் பிடித்துக் கைது செய்துள்ளனர். கொலையாளிகள் அனைவரையும் முழுமையாகக் கைது செய்யக் கோரி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உடல்களைப் பெற மறுத்து வருவதால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு ஒருவித பதற்றமான சூழல் நிலவி வருகிறது.