போர்க்களத்தில் இருந்து பின்வாங்கியதாகக் குற்றச்சாட்டு: காங்கோவில் 66 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை!

 
காங்கோ

 

கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரின்போது ராணுவ நிலைகளைக் கைவிட்டு பின்வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 66 வீரர்களுக்கு, காங்கோ ஜனநாயகக் குடியரசின் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கிழக்கு காங்கோவின் வடக்கு கிவு மாகாணத்தில் உள்ள வாலிகாலே பகுதியில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. மொத்தம் 71 ராணுவ வீரர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். எதிரிக்கு முன்னால் கோழைத்தனமாகச் செயல்பட்டது, ராணுவக் கலகத்தில் ஈடுபட்டது, உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 66 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 4 பேர் விடுவிக்கப்பட்டனர். மற்றொருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

 

கிழக்கு காங்கோவில் M23 உள்ளிட்ட கிளர்ச்சிக் குழுக்களுடன் அரசுப் படைகள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. ராணுவத்தில் கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னரும் இதேபோன்ற குற்றச்சாட்டில் 27 வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.