நள்ளிரவில் குடி, கும்மாளம், போதைப்பொருள்... ஓயோ ஹோட்டல்களில் சோதனையிட்ட ஹைதராபாத் போலீசார் - 11 பேர் கைது!
ஹைதராபாத் குக்கட்பள்ளி பகுதியில் உள்ள இரு தனியார் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட நள்ளிரவுச் சோதனையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குக்கட்பள்ளி துணை ஆணையர் ரிதி ராஜ் மற்றும் உதவி ஆணையர் பி. நரேஷ் ரெட்டி ஆகியோரின் மேற்பார்வையில், காவல் நிலைய அதிகாரி டி. சுவாமி கௌட் தலைமையில் ஆகஸ்ட் 18 அன்று நள்ளிரவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அல்லூரி டிரேட் காம்ப்ளக்ஸில் செயல்பட்டு வந்த 'வைஷாய் காட்டேஜ்' மற்றும் 'பாரடைஸ் ஓயோ' ஆகிய இரு ஹோட்டல்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 6 அமைப்பாளர்கள், 4 வாடிக்கையாளர்கள் மற்றும் 2 பெண்கள் உட்பட மொத்தம் 12 பேரைக் காவல்துறையினர் அடையாளம் கண்டனர். இதில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஹோட்டல் உரிமையாளர் எல்லா கௌட் தப்பியோடியுள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்து 7 ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற முக்கியப் பொருட்களைப் போலீஸார் பறிமுதல் செய்து குக்கட்பள்ளி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். கைதானவர்களில் அச்சந்தி அமானி மற்றும் மங்கலி ராஜேஷ் ஆகிய இருவர் மீது ஏற்கனவே குக்கட்பள்ளி மற்றும் கேபிஹெச்பி காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. தப்பியோடிய ஹோட்டல் உரிமையாளரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
