நடுவழியில் பேருந்தை நிறுத்திவிட்டு திருமண விருந்து சாப்பிடச் சென்ற ஓட்டுநர், நடத்துநர் - பயணிகள் தவிப்பு!

 
பேருந்து

ராமநாதபுரத்தில் பயணிகளை வழியிலேயே காத்திருக்க வைத்துவிட்டு, அரசு பஸ் ஓட்டுநரும் நடத்துநரும் திருமண வீட்டின் விருந்து சாப்பிடச் சென்ற விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், பஸ்சை வழக்கமான நிறுத்தத்தில் நிறுத்தாமல் வேறு பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்பட்ட அரசு சிறப்பு டவுன் பஸ் ஒன்று, நேற்று மாலை புதுகுடியிருப்பு கிராமப் பகுதியில் திடீரென நிறுத்தப்பட்டது. பஸ்சை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநரும், நடத்துநரும் அங்கு நடைபெற்ற ஒரு திருமண விழாவிற்குள் சென்று, அங்கிருந்த திருமண விருந்தைச் சாப்பிடத் தொடங்கியுள்ளனர்.

பஸ் நீண்ட நேரமாக நகராமல் அப்படியே நின்றதால், உள்ளே இருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். நீண்ட நேரம் காத்திருந்தும் ஊழியர்கள் வராததால், பொறுமையிழந்த பயணிகள் அவர்கள் இருவரிடமும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பயணிகள் தங்களைக் கேள்வி கேட்டதால் ஆத்திரமடைந்த ஓட்டுநரும் நடத்துநரும், பஸ்சை இயக்கிய போது தங்களது கோபத்தைப் பயணிகள் மீது காட்டியுள்ளனர். பஸ் ராமநாதபுரம் நகருக்குள் வந்ததும், வழக்கமாகப் பயணிகளை இறக்க வேண்டிய முக்கிய நிறுத்தமான டி-பிளாக் பகுதியில் பஸ்சை நிறுத்தாமல் ஓட்டுநர் அப்படியே கடந்து சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்து தள்ளி இருக்கும் பாரதிநகர் பகுதியில் பஸ்சை திடீரென நிறுத்தி, அனைத்துப் பயணிகளையும் அங்கேயே இறங்குமாறு கட்டாயப்படுத்தி இறக்கிவிட்டுள்ளனர்.

வழக்கமான நிறுத்தத்தில் இறக்காமல், தங்களை வெகுதூரம் அலைக்கழித்த அரசுப் பேருந்து ஊழியர்களின் இந்தத் தன்னிச்சையான போக்கைக் கண்டித்துப் பயணிகள் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் முறைப்படி புகார் அளித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து ராமநாதபுரம் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "பயணிகளை வழியில் தவிக்கவிட்டுத் திருமண விருந்துக்குச் சென்றது மற்றும் பஸ்சை வழக்கமான நிறுத்தத்தில் நிறுத்தாமல் மாற்றி நிறுத்தியது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது துறை ரீதியான தீவிர விசாரணை தற்பொழுது நடைபெற்று வருகிறது. விசாரணையின் அடிப்படையில் அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.