பெரும் பரபரப்பு... ஓட்டுநர் பயிற்சியின்போது திடீரென தீப்பற்றி தீயில் கருகி நாசமான கார்!

 
கார்

 

சென்னை மாதவரம் அருகே உள்ள ஜி.என்.டி. தேசிய நெடுஞ்சாலையில், தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்குச் சொந்தமான கார் ஒன்றில் வாலிபர் ஒருவருக்கு ஓட்டுநர் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. சாலையின் நடுவே கார் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்த அந்தச் சமயத்தில், எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க எஞ்சின் பகுதியிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறத் தொடங்கியுள்ளது. இதனைத் தற்செயலாகக் கவனித்த காரில் இருந்த ஓட்டுநர் பயிற்சியாளர், உடனடியாக காரை சாலையின் ஓரமாக நிறுத்தச் சொல்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தீயணைப்பு வாகனம் தீ நெருப்பு

புகை வந்த சில விநாடிகளிலேயே காரின் முன்பகுதியில் தீப்பற்றி எரியத் தொடங்கியதால், காரில் இருந்த பயிற்சியாளர் மற்றும் பயிற்சி பெற்று வந்த இளைஞர் ஆகிய இருவரும் பதற்றத்துடன் காரை விட்டு உடனடியாக கீழே இறங்கித் தப்பினர். அவர்கள் சரியான நேரத்தில் காரை விட்டு கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாகப் பெரும் உயிர்ச்சேதம் மற்றும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. எனினும், கண் இமைக்கும் நேரத்தில் தீ  கார் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

தீ விபத்து தீயணைப்பு

நெடுஞ்சாலையில் கார் தீப்பற்றி எரிவதைக் கண்ட வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில், செம்பியம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரின் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்துத் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் அந்தப் பயிற்சி கார் முழுமையாக எரிந்து எலும்புக்கூடாகச் சேதமடைந்தது. இக்கோரச் விபத்து குறித்து மாதவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, எஞ்சினில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்துத் தங்களின் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.