தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வறட்சி - குடிநீர், பாசனத்திற்குப் பெரும் நெருக்கடி!

 
வறட்சி

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயிரக்கணக்கான ஏரிகள் நீரின்றி வறண்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதோடு, குடிநீர் தட்டுப்பாடு அபாயமும் உருவாகியுள்ளது.

திருச்சி காவிரி வறட்சி வறண்டு

நீர்வளத்துறையின் பராமரிப்பில் மாநிலம் முழுவதும் மொத்தம் 14,141 ஏரிகள் உள்ளன. இதில் போதிய மழையின்மை காரணமாக தற்போது 4,887 ஏரிகள் முற்றிலும் நீரின்றி வறண்டு போயுள்ளன. நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை இயல்பை விடக் குறைவாகப் பெய்ததே இந்த நீர் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இதன் தாக்கம் காரணமாகக் கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விவசாயி தரிசு நிலம் பூமி மழையில்லை வறட்சி

வறட்சி நிலவும் இந்தச் சூழலில், கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரின் நிலுவைத் தொகை 78.9 டி.எம்.சி.யாக அதிகரித்துள்ளது கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. காவிரியில் உரிய நீர் வந்து சேராத காரணத்தினால், டெல்டா மாவட்டங்களின் விவசாயப் பாசனத்திற்கும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த நீர் நெருக்கடியைச் சமாளிக்க அரசு உரிய துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.