“விவசாயிகளுக்கு உடனே வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும்” - உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

 
உதயநிதிவிஜய்

டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றிப் பயிர்கள் கருகி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயர் துடைக்கத் தமிழக அரசு உடனடியாக வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேட்டூர் அணைத் தண்ணீர் திறப்பு மற்றும் பயிர்ச் சேதம் தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் செயல்பாடுகள் மீது அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்காமல் விட்டதால் குறுவை சாகுபடி பொய்த்துப் போனதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயி விவசாயக்கடன்

சம்பா சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற விவசாயிகள் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கையைப் புறக்கணித்து, கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டதால், தற்போது டெல்டா பகுதிகளில் தண்ணீரின்றிப் பயிர்கள் கருகி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலை ஏற்படக்கூடும் என்றும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்றும் கடந்த மாதமும் அதற்கு முன்பும் என இரண்டு முறை அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இருப்பினும், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை ஏற்காததால் விவசாயிகள் இன்று துயரத்தில் நிற்பதாக அவர் சாடியுள்ளார்.

முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளை ஏமாற்றியது போல் இல்லாமல், டெல்டா பகுதிகளில் ஏற்பட்டுள்ள பயிர்ச்சேதம் குறித்து வெளிப்படையான கள ஆய்வை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

உதயநிதி

விவசாயிகளின் துயரங்களைக் கண்டுகொள்ளாமல் காலதாமதம் செய்வதை விடுத்து, அவர்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் உடனடியாக வறட்சி நிவாரணத் தொகையை அறிவித்து வழங்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். டெல்டா பகுதியில் வறட்சி மற்றும் பயிர்ச் சேதம் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.